தினம் ஒரு பாசுரம் - 84
தவம் தரும் செல்வம் தகவும் தரும் சலியாப் பிறவிப்
பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாமம் என்னும்
திவம் தரும் தீது இல் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே
ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
அமுதனாரின் ஆச்சார்ய பக்தி ஈடு இணையற்றது என்பது ஒரு புறமிருக்க, அவர் அருளிய நூற்றந்தாதிப் பாசுரங்களின் செழுந்தமிழ் நம்மை வியப்பில் ஆழ்த்த வல்லது. இப்பாசுரத்தில் அவரது சொல் விளையாட்டைக் கவனியுங்கள், தவம், பவம், திவம், பரந்தாமம் என்று சொற்களை கோத்து அழகானப் பொருள் தரும் குரு வந்தனப் பாசுரமாக, இலக்கணம் பிறழாமல், வடித்துள்ளார். இப்பாசுரத்தில் ”தீது இல் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு” என்ற சொற்றொடரை முதலில் கொணர்ந்து பொருள் கொள்ளவேண்டும்.
பாசுரப்பொருள்:
தீது இல் இராமானுசன் - தீமைகள் அணுகவியலா/ குற்றங்கள் அற்ற ராமானுஜர்
தன்னைச் சார்ந்தவர்கட்கு - தன்னை வந்தடைந்த அடியவர்க்கு -- 1
***********************************************************
தவம் தரும் - (பற்று விட்டு) சரணாகதித்துவத்தை அருளவல்லவர்;
செல்வம் தகவும் தரும் - ஐம்புலன்களை வெல்லத்தக்க உபாயத்தையும், ஞானத்தெளிவையும் தரவல்லவர்;
சலியாப் பிறவிப் - ஆற்றாமை அளிக்கும் பிறப்புகளின்
பவம் தரும் - உலக வாழ்வில் ஏற்படுகின்ற
தீவினை பாற்றித் தரும் - கொடும்பாவங்களை அழிக்க வல்லவர்;
பரந்தாமம் என்னும் திவம் தரும் - பரமபதம் எனும் வானுலகப் பெரும்பேறு அருளவல்லவர். --- 2
**********************************************************************
அவன் சீர் அன்றி - அன்னாரின் சீர்மை மிக்க குணங்களை விடுத்து
யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே - நான் வேறொன்றை மன மகிழ்வுடன்
உவந்து அருந்தேன் - விரும்பி (ஒருபோதும்) அனுபவிக்க மாட்டேன் -- 3
பாசுரச் சிறப்பு:
இப்பாசுரச் செய்தியை 3 பகுதிகளாக (மேலே குறிப்பிட்டவாறு) பிரிக்கலாம்
1. ராமானுஜரைப் போற்றி வணங்குதல் (முத்தாய்ப்பு)
2. ராமானுஜர் அடியவர்க்கு எவ்வகையில் அருளுகிறார் என்பதை எடுத்துரைப்பதன் வாயிலாகவே அவர் அருஞ்சீர்மையைச் சொல்லுதல்
3. ராமானுஜரின் திருவடியைப் பற்றுதலே உய்வுக்கு ஒரே உபாயம் என்பதைக் குறிப்பில் சொல்லல்
தவம் தரும் செல்வம் தகவும் தரும் சலியாப் பிறவிப்
பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாமம் என்னும் திவம் தரும்
”தரும்” என்பது 5 முறை பாசுரத்தில் வருகின்றது. ”பவம் தரும்” என்பது தவிர மற்ற நான்கும் (தவம் தரும், தகவும் தரும், தீவினை பாற்றித்தரும், திவம் தரும்) ராமானுஜரின் குணநலன்களைப் போற்றுவதாய் அமைந்துள்ளன என்பது குறிப்பிடவேண்டியது.
முதலில், சரணாகதியைக் கைக்கொள்ள வல்ல ஆற்றலை, ராமானுஜர் தந்தருள்வார் எனத் தொடங்கி, அதற்கு மிக அவசியமான புலனடக்கத்தையும், நல்லறிவையும் அளிப்பார் என்றும், அதற்கு அடுத்தபடியாக, நம் பல்பிறப்புப் பாவங்களை ஒழித்து நம்மை பரமபத பேறுக்குத் தகுதியானவராகச் செய்வார் என்றும், வரிசைக்கிரமமாக அமுதனார் அருளியிருப்பதும் கவனிக்கத் தக்கது.
இங்கு “செல்வம்” என்பதைப் பொருட்செல்வமாகக் கொள்ளுவதை விட, புனலடக்கத்திற்கான வழிவகைகளைக் குறிப்பதாகக் கொள்ளல் தகும்.
இப்பாசுரத்தில் ”சலியாப் பிறவி”, “சரியாப் பிறவி” என்று 2 விதமாகவும் கொள்ளலாம். “சரியாப்பிறவி” எனும்போது, “சரிவே இல்லாத” அதாவது, (கர்மவினைகள் காரணமாக) விடாமல் தொடர்ந்து நாம் எடுக்கும் பூவுலகப் பிறப்புகளைச் சொல்கிறது.
---எ.அ.பாலா